Tuesday, May 8, 2018

பாவத்தின் சம்பளம் பதவியொழிதலும்

மிருதுப்பூக்களின் வீடு தேடித் தேடி
வந்து சேர்ந்தேன் வாசலுக்கு

வாசலெங்கும்
வேர்கள் பிய்த்தெறியப்பட்ட வாசம்

வேர்களின் நரம்புகளின்
நீர்க்கசிவில் ரத்த வாடை

அடர்ப் பூக்காடெங்கும் மிருகங்களின் கழிவின் துர்நாற்றம்

நாசித்துவாரங்கள் மீது
நம்பிக்கையில்லா தீர்மானம்

விழிப்பாவைகள் பிதுங்கப் பிதுங்க
ராணுவ விசாரணை செய்ய
வெற்றிடக் கிடங்குகள்

மூளையின் திசுக்களெங்கும்
எதிர்ப்புக்குரல்களின்
பழைய பதிவுகள்

முழங்க முயன்று ஒலியடங்க

இருதயச் சுவடு மட்டும்
எங்கும் தென்படவில்லை

அணுக்கழிவு ஆதரவின் ஒற்றைக்குரலில்
இருதயம்
இற்றுப்போனதாம் அன்றே

இறுதி விசாரணையில்
இன்னும் கேட்கிறது இயலாமையின்
குழந்தைக் குரல்கள்

தூரத்தில்
நாற்காலிகள் எரிந்துமுடித்த
சாம்பல் மணம் எழுந்தபடி

பாவத்தின் சம்பளம் பதவியொழிதலும்

ரா.ராஜசேகர்

No comments:

Post a Comment