Tuesday, May 8, 2018

முரண் வினை

இருள்கிழிசல்களை
ஒளிக்கத்திகள்
கிழித்து நிர்மூலமாக்கும்
நிலம் பிரகாசிக்கும்
நிஜ சூரியன் நிலத்தில் முளைக்கும்
நீளும் கிழக்கும் வானும்

வேர்களின் உரைவீச்சில்
கிளைகளும் இலைகளும்
அடரமைதியில் உறையும்

புயலின் மவுனத்தில்
காற்றும் கதறும்

பொறுமையின் புதிர்சிரிப்பில்
அவசரம் விடைபெறும்

இயங்குதலின் அச்சில்
எல்லாம் இங்கே எளிதாகும்

இயல்பு திரியா இயல்பு
எங்கும் விரவிக் கோலோச்சியபடியே

ரா.ராஜசேகர்

லீலைப் பூப்பறிக்கும்...

யாரோ யாரோடே பேசட்டுமே
தொடர் கூச்சலிலேன்
தூக்கம் தொலைக்கிறாய்
துக்கம் அழைக்கிறாய்

அடரமிலத்தை வீசுவதால்
ஆகாயத்தை அரித்துவிடுமா அது

தங்கமா தகரமா
அக்மார்க் முத்திரையிடும்
அதிகாரமுனதா?

ஜாமக் கூடாரத்தில்
காமக் கோடரிகளில்
லீலைப் பூப்பறிக்கும்
நித்யானந்தங்களில் நீ
நிஜத்தை சேர்ப்பதேன்?

உன் கண்ணாடியே
உன் பிம்பத்தில் பொய்யிருப்பதாய்ப்
புறந்தள்ளும்போது
பூதக்கண்ணாடி அணிந்து
சூரியப் பிம்பத்தில்
சொத்தையிருப்பதாய்ச் சொன்னால்
நாகரிகத்தின் நவதுவாரங்களும்
திராவகத்தை உன்மீது
தெளித்துவிட்டே செல்லும்

ரா.ராஜசேகர்

பாவத்தின் சம்பளம் பதவியொழிதலும்

மிருதுப்பூக்களின் வீடு தேடித் தேடி
வந்து சேர்ந்தேன் வாசலுக்கு

வாசலெங்கும்
வேர்கள் பிய்த்தெறியப்பட்ட வாசம்

வேர்களின் நரம்புகளின்
நீர்க்கசிவில் ரத்த வாடை

அடர்ப் பூக்காடெங்கும் மிருகங்களின் கழிவின் துர்நாற்றம்

நாசித்துவாரங்கள் மீது
நம்பிக்கையில்லா தீர்மானம்

விழிப்பாவைகள் பிதுங்கப் பிதுங்க
ராணுவ விசாரணை செய்ய
வெற்றிடக் கிடங்குகள்

மூளையின் திசுக்களெங்கும்
எதிர்ப்புக்குரல்களின்
பழைய பதிவுகள்

முழங்க முயன்று ஒலியடங்க

இருதயச் சுவடு மட்டும்
எங்கும் தென்படவில்லை

அணுக்கழிவு ஆதரவின் ஒற்றைக்குரலில்
இருதயம்
இற்றுப்போனதாம் அன்றே

இறுதி விசாரணையில்
இன்னும் கேட்கிறது இயலாமையின்
குழந்தைக் குரல்கள்

தூரத்தில்
நாற்காலிகள் எரிந்துமுடித்த
சாம்பல் மணம் எழுந்தபடி

பாவத்தின் சம்பளம் பதவியொழிதலும்

ரா.ராஜசேகர்

அகதி மாடு

சிறுபசுங்கன்றெனக்கு
காம்பில் தேக்கித் தாயணைகட்டிய
முட்டிக் குடிக்கும் மடிப்பால்

குரல்வளைக் குளிரத்
தின்று செரிக்கும்
பனித்துளி முட்டைகள்

பாடலின்றி ஆடித்திரிந்த
சாணவாசம் கமழும்
சொந்தத் தொழுவம்

எப்போதும் என் முகத்தில் முத்தமிடும்
ரவியண்ணனின் மகள்

எதெதுவோ இன்னும்
கண்களிலும் வழிகிறது
வேறொருவருக்கு விற்றுவிட்டபின்னும்

மண்ணற்று அகதியாதலின் வலி
மாட்டுப் பிறவிக்குமுண்டே

ரா.ராஜசேகர்

அமில எச்சில்

மனமடக்கி
மூளைப் பெருக்கி
யாருமறியா வெளிக்குள்
பயணிக்குமாசையில்
இலைகளின் கூச்சலொதுக்கி
கிளைகளின் பேச்சு விலக்கி
நிழல்திரவம் துடைத்து
வேர்களின் மொழியிசை கேட்க
பேராழத்தில் ஓர் அடரூடுருவல்

ஆணிவேர் சிறப்புரை
பக்கவேர்களின் பொழிப்புரை
சல்லிவேர்களின் சத்த சந்தம்
வேர்க்கூட்டத்தின் கூட்டிசையில்
நீருறிஞ்சலின் பாடல்கள்
வேர்களின் நாளங்களில்
திசுக்களின் திமிர்நடனம்
இல்லாத இசைக்கருவிகளின்
மீட்டலில்
அடர்ந்ததிரும்
பூமியின் மர்மப்பிரதேசம்

இத் தொடர்ப்புதிரின்
நீள் பயணநீள்கையில்
பெருக்கமடைந்து திமிறிய மூளையின் உச்சியில்
செருகப்பட்ட வாள் சொன்னது :

அபகரிப்புக்காளாகும் நிலத்தின் மகன் நீ
சொந்த நிலம் மீட்கப் பார்
சுதந்திரம் வேண்டுமுனக்கு
என் ஸ்ருதிலயங்களை ரசிக்கவும்

மனமுகமெங்கும் அமில எச்சில்
அகன்றெழுந்து மேலே வந்தேன்
அரிப்புடன் அமில எச்சில் துடைத்து

ரா.ராஜசேகர்

Thursday, April 26, 2018

அது வேறு இது வேறு

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்

அது வேறு
இது வேறு

முதுகில் குத்தியதால்
குப்புற விழுந்தேன்
குதூகலித்துக் கூக்குரலெழுப்பினாய்

கண்ணீரோடு கவனமாய் எழுந்தேன்

உன்னை என் கனவுக்குள்கூட
நுழைய அனுமதியேன் 
என
மனம் அடங்குச் சட்டம் இயற்றி

சற்றுமுன் ஒரு தகவல்

எழவே முடியாத வகையில்
இடர்ப்பாடுகளுக்கிடையே நீயென

உன் முட்டைக் கண்களில்
கண்ணீர் மூட்டைகள்
கவிழ்ந்தபடியும் கவிழாமலும்

இது
செவிமடல்கள் உரசிவிழுந்தச்
செய்திதான்

இருந்தும்

துரோகியின் குரல்வளையில்
துக்கம் கூடுகட்டுகிறபோதுகூட
கண்ணீர்க் கட்டில்போடுகிறது
என் கண்களில்

இந்த நேரத்தில்

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்


உன் கண்ணீர் 
அது வேறு

என் கண்ணீீர்
இது வேறு

பொதுவுடைமைத் தனிவுடைமை

என்னதான்
இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்

சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து
நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்

பேணவே முடியாப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்

உலகம் பார்க்கவேவியலாத
ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே
களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே
மனதிலும் மண்ணிலும்
உருருளவிடும்

பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும்
திருவிழா வெளிச்சம் அணியும்

கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே
இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்

எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டும்
நட்பு மட்டுமே

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

நட்பு நாட்டுடைமைதான்
ஆனால்
நண்பன் மட்டும்
பொதுவுடைமைத் தனிவுடைமை