Thursday, April 26, 2018

அது வேறு இது வேறு

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்

அது வேறு
இது வேறு

முதுகில் குத்தியதால்
குப்புற விழுந்தேன்
குதூகலித்துக் கூக்குரலெழுப்பினாய்

கண்ணீரோடு கவனமாய் எழுந்தேன்

உன்னை என் கனவுக்குள்கூட
நுழைய அனுமதியேன் 
என
மனம் அடங்குச் சட்டம் இயற்றி

சற்றுமுன் ஒரு தகவல்

எழவே முடியாத வகையில்
இடர்ப்பாடுகளுக்கிடையே நீயென

உன் முட்டைக் கண்களில்
கண்ணீர் மூட்டைகள்
கவிழ்ந்தபடியும் கவிழாமலும்

இது
செவிமடல்கள் உரசிவிழுந்தச்
செய்திதான்

இருந்தும்

துரோகியின் குரல்வளையில்
துக்கம் கூடுகட்டுகிறபோதுகூட
கண்ணீர்க் கட்டில்போடுகிறது
என் கண்களில்

இந்த நேரத்தில்

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்


உன் கண்ணீர் 
அது வேறு

என் கண்ணீீர்
இது வேறு

No comments:

Post a Comment