Wednesday, April 25, 2018

பிய்த்தெறிந்துவிட்டுப் போ...



எந்தக் கூட்டில்தான் கிடக்கிறது
என் தாய்ப்பறவையின் சிறகுகள்?

எந்தக் காட்டில்தான் இருக்கிறது
என் முன்னோர்களின்
முகவரி சொல்லும்
மரங்களும் கிளைகளும்?

சிறிய கால்வாய்கள் கூடவா
மிச்சமில்லை
என் பாட்டன்கள்
தண்ணீர் தெறிக்க விளையாடியவை

பிரியமாய் என் பாட்டிகள் தொழுத
காதற் பெருமாள் கோயில்கள்
கண்பறிக்கும்
சிவப்புச் சேலை அம்மன்கள்

குறைந்தபட்சம்
என்னவர்களின் உயிர் மூச்சையும்
அந்தரங்கத்தின் பெருமூச்சுகளையும்
மூங்கில் கழிகளிலும் கீற்றோலைகளிலும்
சேமித்துக் காத்தக்
கூரை வீடுகளேனும்

இப்படி நீ கேட்பினும்

எந்தப் பதிலும் உன் கேள்விக்கு
விரோதி மவுனம்
காப்பதென்றானப் பின்

பேசிப் பயனில்லை
பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

தனிப் பறவையாகு
தனிக் கூடு அமை
முடியும் அதன்வழியே
தனி வீடும்
தனி நாடும்!

ரா.ராஜசேகர்

(நாடு தொலைத்தோரின் மனக்குரல்)

No comments:

Post a Comment