Thursday, April 26, 2018

இதென்ன...

இதென்ன?...

இருதயத்தின் இண்டு இடுக்குகளெங்கும்
ஏதோ ஒரு திரவம் விரவி வழிகிறது
நாளங்கள் வழியே
கூத்தாடி கூத்தாடி
விழிகளை வெளித்தள்ளி வெள்ளக்காடாய் முகவெளிகளில்

காதல் காமம் வன்மம் குரூரம் கடந்த
மொழியே அறியா முழுவுணர்வா?

துண்டு துண்டு செல்களின் மீது
நிரம்பி விரியும் குதூகலக் கூடாரம்

களமும் போரும் கண்முன் மிரட்ட
“என்ன செய்துவிடும் என்னை?”
மனோபாவம் தோள் தட்ட

நிஜம் மட்டுமே நுரைத்துச் சிரிக்கும்
நிமிடங்கள்தான் நீளும் இனி…

இதென்ன?

இருதயத்தின் இண்டு இடுக்குகளெங்கும்
ஏதோ ஒரு திரவம் விரவி வழிகிறது

No comments:

Post a Comment